Wednesday, September 21, 2016

முழு அடைப்பு போராட்டம்

சென்னை,  கர்நாடகாவில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராகவும் நடந்து வரும் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடந்து கொண்டிருக்கும் முழு அடைப்பால் சென்னை மாநகரத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் வாகன ஓட்டிகளும் இந்த பந்த்தில் முழு ஆதரவு அளித்தனர், இதனால் சென்னையின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பெங்களூருவில் தமிழர்களின் சொத்துக்கள் மீது வெறித்தனமான  தாக்குதல் நடைபெற்றது. இதனால் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் லாரிகள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்தும் மத்திய அரசை இந்த பிரச்சனையில் தலையிடக் கோரியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

சென்னையைப் பொறுத்தவரை வணிகர் சங்கங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் எந்த சங்கத்திலும் இல்லாத கடைகள் கூட தாங்களாகவே முன் வந்து தங்கள் கடைகளை அடைத்து தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர். இதனால் சென்னையில் உள்ள பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. 

சென்னையில் இருக்கும் சில தனியார் பள்ளிகளும் இப்போராட்டத்தில் தங்களின் ஆதரவை தெரிவித்தனர், ஆனால் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் எப்பொழுதும் போலவே இயங்கிக் கொண்டிருந்தன.

இப்போராட்டத்தில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்க்காக பல பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு நிறைந்து இருந்தது.


இதில் பல்வேறு கட்சியினரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து ரயில் மற்றும் சாலை மறியல் ஈடுபட்டனர். வி சி கட்சியின் சார்பில் பெரம்பூர் சமூக நலக்கூடத்தில் போராட்டத்தை ஆதரித்து கூட்டம் வைக்கப்பட்டதால் அங்கு சற்று பதற்றமாக சூழல் நிலவியது, அங்கு காவலர்களும் அதிகமான அளவில் குவிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.  











No comments:

Post a Comment