Wednesday, September 18, 2019

கைவினை பொருட்கள் மூலம் கண்கவர வைக்கும் காவேரி எம்போரியம்

நம் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்துவரும் கைவினைப்பொருட்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகிறது இந்த காவேரி கைவினை எம்போரியம்.
ஏனெனில், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு என்பது ஒருவரது வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் மன அமைதியைக் கொடுக்கும், மன  அழுத்தத்தைப் போக்கும், உடல் மனம் சார்ந்த ஓர் ஆன்மிக வளர்ச்சிக்கான வழிமுறையாகவும் துணை நிற்கின்றது.


காலை 10 மணி முதல் இரவு 8:30 மணி வரை பரபரப்பான விற்பனைக்கு நடுவே உள் நுழைந்தால் கண்களை கவரும் விதவிதமான  பொருட்கள்,
எதை எடுக்க எதை வைக்க என்று குழப்பத்தில் நிற்க, ஒவ்வொரு பொருளின் சிறப்புகளை சொல்ல சொல்ல எல்லாவற்றையும் வாங்கிவிடும் ஆவலை ஏற்படுத்துகிறது இந்த கைவினை பொருட்கள்.
நம்ம கலாச்சாரம் மட்டுமல்லாமல் பல வட இந்திய  மாநிலங்களோடு கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் இவர்களிடம் வாடிக்கையாளர்கள் வருவதாகவும்  கூற, அதைச் சார்ந்த கலை மற்றும் கைவினைப் பொருட்களையும் அதன் நுட்பத்தையும் நமக்கு காட்டி நம்மை வியப்பில் ஆழ வைத்தார் கடையில் வேலை பார்க்கும் ஊழியர் சுதா.
நடப்பாண்டு நவராத்திரி விழாவுக்கு சுமார் 15 நாட்கள் உள்ள நிலையில், தற்போதே கொலு பொம்மை விற்பனை தொடங்கியுள்ளது.

மேலும் இதை பற்றி விற்பனை நிலையக் கண்காணிப்பாளர் பாண்டியன் கூறியதாவது:
மண் எடுப்பவர்கள், மோல்டு செய்வோர், வர்ணம் தீட்டுவோர் என பல்வேறு தரப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இடையில் ஏற்பட்ட எதிர்பாராதவிதமாக, தொழில்மயமாக்கலும், அதன் விளைவாக பெருமளவிலான உற்பத்தியும் பல கைவினைக் கலைகளின் அடிப்படையையே சீர்குலைத்திருக்கின்றது. கடந்த நூறு ஆண்டுகளில் பல கைவினைப்பொருட்கள் இருந்த இடமே இப்போது தெரியவில்லை. நமது வருங்கால சந்ததியினருக்கு நமது மரபின் மீதும் கலைகளின் மீதும் நிலைத்திருக்கும்படியான தாக்கத்தை ஏற்படுத்த ‘‘நமது பாரம்பரிய கலைகளையும், கலைத்திறனையும் மீட்டெடுத்து, புத்துயிரூட்டும் பெருமுயற்சியில் கைவினைப் பொருட்கள் தயாரிப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

அந்த வகையில் சுபநிகழ்ச்சிகள் மற்றும் நவராத்திரி விழாக்களில் வீட்டு அலங்காரங்களில்  பயன்படுத்தப்படும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களும்,
 மத்திய பிரதேச வெண்கல சிலைகள், ஜெய்ப்பூர் மரச் சிற்பங்கள், பட்டு, பருத்தி ஆடைகள், ஜெய்ப்பூர் கற்கள், காஷ்மீர் சுடிதார் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்


ஐம்பொன் சிற்பம், பித்தளை விளக்கு, பூஜை பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், தஞ்சை கலைத்தட்டு, மரச்சிற்பம், கற்சிற்பம், வெள்ளை மற்றும் கருப்பு உலோகத்தால் ஆன சிற்பம், குபேர விளக்கு என பல வைகயான பொருட்கள் இங்கு உள்ளது.
வழக்கம்போல தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, கிரிக்கெட், அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கச்சேரி, பொங்கல், கிருஷ்ண லீலா, கார்த்திகை பெண்கள், கள்ளழகர், மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் புதிதாக மைசூர் தசரா செட், மாமல்லபுரம், பாக்சிங் விளையாட்டு, ஜோதிர்லிங்கம், தீபாவளி செட் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

மரப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட
ஓவியங்கள்


மேலும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள், கொலுவிற்குத் தேவைப்படும் சுவாமி சிலைகள், உபயோகமான பரிசுப் பொருட்கள் செய்வதன் மூலமாக மாதம் 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் விற்பனை ஆகிறது என்கிறார் சுதா. கலைத்திறமையும், பொறுமையும், நேர்மையான உழைப்பும் இருந்தாலே கைவினைப் பொருட்களை விற்பனை செய்து சிறந்த முறையில் சம்பாதிக்கலாம் என்கிறார்.
கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கலை மற்றும் கைவினைப் பொருட்கள் வாயிலாக பிரதிபலிப்பவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதுபோன்ற தொழிலை பெண்கள் செய்தால், கைநிறைய சம்பாதிக்கவும், குடும்பத்தை பொருளாதார ரீதியாக மகிழ்வாக நடத்தவும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளது என்றார்.

"முன்பெல்லாம் சாமி சிலைகள்தான் அதிகம் விற்பனையாகும். தற்போது, கிரிக்கெட், விவசாயம், கிராமிய பெண்கள், கிராமத் தொழில்கள், பாக்சிங் என பல்வேறு வகைகளில் கொலு பொம்மைகள் விற்பனை ஆகிறது" என்கிறார் கண்காணிப்பாளர் பாண்டியன். சுமார் 5 அங்குலம் முதல் 4 அடி வரையிலும் சிலைகள் தயாரிக்கப்பட்டு, கொலுவை அலங்கரிக்கின்றன. கோயில்கள், வீடுகளில் கொலு வைப்பதற்காக மட்டுமின்றி, பரிசுப் பொருளாக வழங்கும் இந்த பொம்மைகளை ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.கைத்தறி ஆடைகளுக்கு 20 சதவீதமும், கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

எங்களின் அன்பு வாடிக்கையாளர்கள், நவராத்திரி நேரங்களில் எங்களுக்கு ஓய்வு எடுக்கக்கூட நேரம் தரமாட்டார்கள். குறைந்த நேரம், ஆனால் நேர்த்தியான பொருட்களை உருவாக்கவும் வேண்டும் என்கிறார் அங்கு வேலை பார்க்கும் சுதா.
கலை எந்த வடிவில் இருந்தாலும் அழகுதான். அதுவும் நம் அன்றாட வாழ்க்கையிலும் நாம் பங்கு கொள்ளும் சுப நிகழ்வுகளிலும் தேவைப்படுகிற பொருட்களும் கலைநயம் மிக்க படைப்பாக இருந்தால் எப்படி இருக்கும். அதற்கான ஒரு கலைக்கூடமாக காவேரி கைவினை எம்போரியம் திகழ்ந்து வருகிறது.

                              - மனிஷா சூரியமூர்த்தி
                                         18/09/2019

No comments:

Post a Comment